ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த் தீட்சித் காலமானார்
அயோத்தியில் ராமர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த் தீட்சித் இன்று காலை காலமானார். 86 வயதான அவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் மணிகர்னிகா காட்டில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஜனவரி 22ம் தேதி அயோத்தி கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. வாரணாசியின் மூத்த அறிஞர்களில் ஒருவரான தீட்சித் மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஆனால் அவரது குடும்பம் பல தலைமுறைகளாக வாரணாசியில் வசித்து வருகிறது.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்
தீட்சித் மறைவுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள தீட்சித், "காசியின் சிறந்த அறிஞரும், ஸ்ரீ ராம ஜென்மபூமி பிராண பிரதிஷ்டையின் தலைமை அர்ச்சகருமான ஆச்சார்யா ஸ்ரீ லக்ஷ்மிகாந்த் தீட்சித் அவர்களின் மறைவு ஆன்மீக மற்றும் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சமஸ்கிருத மொழி மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கான அவரது சேவைக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். "இறந்த ஆன்மாவுக்கு இறைவனின் காலடியில் இடம் கொடுக்கவும், அவரது சீடர்களுக்கு இந்த துக்கத்தைத் தாங்கும் வலிமையை அளிக்கவும் நான் பகவான் ஸ்ரீராமரைப் பிரார்த்திக்கிறேன்," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.