கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை துவக்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று(செப்.,15)தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை காஞ்சிபுரத்தில் துவக்கி வைத்துள்ளார். காஞ்சிபுரம் ஆடவர் கல்லூரியில் இந்த விழா நடந்துள்ளது. இதில் பேசிய மு.க.ஸ்டாலின், "கலைஞர் உரிமை தொகை திட்டத்தினை துவக்கிவைக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நான் கூறுகிறேன். இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த உரிமைத்தொகையினை பெண்கள் பெறுகிறார்களோ அத்தனை ஆண்டுகளும் இந்த ஸ்டாலின் தான் தமிழகத்தில் ஆட்சி செய்கிறான் என்று பொருள்" என்று கூறியுள்ளார். தொடர்ந்து, "கலைஞர் மகன் சொன்னதை செய்வான் என்பதற்கு இந்த திட்டமே மிகப்பெரிய சாட்சி" என்றும் அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
பெண்களின் உழைப்பினை அங்கீகரிக்கவே இந்த திட்டம் - தமிழக முதல்வர்
தொடர்ந்து பேசிய அவர், ஒரு ஆணின் வெற்றிக்காகவும், குழந்தைகளின் நலனுக்காகவும் ஒரு பெண்மணி எவ்வளவு நேரம் பணிபுரிகிறாள் என்பது தெரியுமா?என்று கேள்வியெழுப்பினார். அதற்கெல்லாம் கணக்கிட்டு ஊதியம் கொடுக்கமுடியுமா?என்றும் வினவியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், "யாரேனும் உங்கள் மனைவி என்ன செய்கிறார்கள்?என்று கேட்டால், சும்மாதான் இருக்கிறார்கள் என்று கூறுவார்கள். ஆனால் பெண்களால் அவ்வாறு சும்மா இருக்க முடியாது" என்றும் பேசியுள்ளார். வீட்டில் பணிபுரியும் பெண்களின் உழைப்பினை அங்கீகரிக்கவே இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார். ஆண்களை விட பெண்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சியின் முக்கிய நோக்கம் என்று கூறிய அவர், ஆட்சிக்கு வந்தவுடன் நிதிநிலை சரியில்லாத காரணத்தினால் தான் இத்திட்டத்தினை உடனே துவங்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.