சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
ஈரோடு சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா மிக விமர்சையாக 15 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இங்கு தேரோட்டம் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்தாண்டு தேரோட்ட திருவிழா வரும் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூச தேர்த்திருவிழா நடத்துவது குறித்த அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று(ஜன., 22) நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தேரோட்டம் நடைபெறும் நாளான வரும் பிப்ரவரி 5ம் தேதியும், 6ம் தேதியும் மலைப்பாதை வழியாக கோயிலுக்கு செல்ல கார்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பாதுகாப்பு நடவடிக்கையாக மருத்துவ முகாம்கள் அமைக்க ஏற்பாடு
இதனை தொடர்ந்து திருவிழா நடைபெறும் இந்த 15 நாட்களும் மலைக்கோயில் மற்றும் அடிவாரத்தில் மருத்துவ முகாம்கள் அமைக்கவும், பக்தர்களின் வசதிக்காக காங்கேயம், ஊத்துக்குளி, அறச்சலூர் பெருந்துறை போன்ற பகுதிகளில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்போவதாகவும் தெரிகிறது. அதனையடுத்து குடிநீர், கழிப்பறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 5ம்தேதி நடக்கிறது, இதில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம்பிடித்து இழுத்து தெற்கு ராஜவீதி சந்திப்பில் நிறுத்துகிறார்கள். இதனையடுத்து பிப்ரவரி 10ம்தேதி நிறைவுறும் இந்த தேர்த்திருவிழாவிற்கு இந்தாண்டு அதிக பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு தற்போது தேரினை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.