EB அலுவலகத்தில் 18 கணினி ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு; ₹297 கோடி ஊழல் ஆதாரங்களை அழிக்கச் சதியா?
செய்தி முன்னோட்டம்
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், நிலக்கரி கொள்முதல் மற்றும் டெண்டர்கள் தொடர்பான மிக முக்கிய ரகசிய ஆவணங்கள் அடங்கிய சுமார் 18 கணினிகளின் ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் தமிழக அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரியத்தின் உள்விவரங்கள் மற்றும் பாதுகாப்பு ஓட்டைகள் நன்கு தெரிந்த நபர்களின் திட்டமிட்ட சதித் திட்டமாகவே இந்தத் துணிகரத் திருட்டு பார்க்கப்படுகிறது. தமிழக மின்சாரத்துறை அமைச்சராகப் புதிதாகப் பொறுப்பேற்ற ஆர். நிர்மல்குமார், கடந்த மே 16-17 தேதிகளில் மின்வாரிய தலைமையகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருட்டு
அமைச்சர் எச்சரித்த அதே வார இறுதியில் அரங்கேறிய திருட்டு
ஆய்வின்போது அமைச்சர்,"துறையில் எவ்வித முறைகேடுகளும் பொறுத்துக் கொள்ளப்படாது; தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது" என்று அதிகாரிகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார். அமைச்சர் நிர்மல்குமார் வந்து சென்ற அதே வார இறுதியில், அலுவலக ஊழியர்கள் நடமாட்டம் குறைவாக இருந்த விடுமுறை நாளைப் பயன்படுத்தி இந்தத் திருட்டு மிக லாவகமாக அரங்கேற்றப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் பொருள் மேலாண்மைத் துறையில் உள்ள நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கிய டிஜிட்டல் தரவுகளே திருடர்களின் முதன்மை இலக்காக இருந்துள்ளன. காகித ஆவணங்கள் அலுவலகத்தில் இருந்தாலும், புலனாய்வு அமைப்புகளிடம் எளிதில் சிக்கக்கூடிய முக்கிய சாஃப்ட் காப்பிகள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை முழுமையாக அழிக்கும் நோக்கில் இந்தத் திருட்டு நடந்துள்ளது.
புகார்
4 தளங்களில் கைவரிசை; அதிகாரிகள் புகார் அளிக்கத் தயக்கம்
கடந்த மே 30-ம் தேதி பல்வேறு பிரிவு ஊழியர்கள் தங்களின் கணினிகளை இயக்கிய போது, முக்கியத் திட்டக் கோப்புகள் காணாமல் போயிருப்பதை உணர்ந்தனர். இதையடுத்து கணினி நெட்வொர்க் நிர்வாகிகள் மூலம் அவசரமாகச் சோதனை செய்யப்பட்டபோது, தலைமையகத்தின் 4, 5, 7 மற்றும் 10-வது தளங்களில் உள்ள அலுவலக கணினிகளில் இருந்து ஹார்ட் டிஸ்க்குகள் தனியாகக் கழற்றித் திருடப்பட்டிருப்பது உறுதியானது. இவ்வளவு பெரிய டிஜிட்டல் திருட்டு நடந்தும், இதுவரை 8 ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டது குறித்து மட்டுமே மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் முறையான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 10 ஹார்ட் டிஸ்க்குகள் குறித்துப் புகார் அளிக்கப் பல உயர் அதிகாரிகள் இன்னும் தயக்கம் காட்டி வருவது போலீசாருக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி
திட்டமிட்டே முடக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள்
இந்தச் சம்பவத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினரை அதிர வைத்த மற்றொரு தகவல் என்னவென்றால், மின்வாரிய தலைமையகத்தின் மிக முக்கியப் பிரிவுகளில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிசிடிவி கேமராக்கள் எதுவும் செயல்படவில்லை என்பதுதான். இடைத்தரகர்கள் மற்றும் ஊழல் அதிகாரிகளின் சட்டவிரோத நடமாட்டத்தை மறைக்கவே கேமராக்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மின்வாரிய லஞ்ச ஒழிப்புப் பிரிவு பலமுறை சிசிடிவி கேமராக்களைப் பொருத்த பரிந்துரை செய்தும், "செலவு அதிகம்" என்ற மொட்டையான காரணத்தைக் கூறி கட்டிடப் பிரிவு அதிகாரிகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டதும் தற்போது அம்பலமாகியுள்ளது.
ஊழல் வழக்கு
₹297 கோடி ஊழல் வழக்கு: சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையின் பின்னணி
இந்தத் திருட்டு சாதாரணமான ஒன்றாகப் பார்க்கப்படாமல், டான்ஜெட்கோவில் தற்போது நடந்து வரும் மெகா ஊழல் விசாரணைகளை முடக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. மின்வாரிய உருமாற்றிகள் (Transformers) கொள்முதலில் ₹297 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்படும் வழக்கை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-2023 காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு டெண்டர்கள் தொடர்பான பணப் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறையும் (ED) தனியாக விசாரித்து வருகிறது. இந்த இரு முக்கிய புலனாய்வு அமைப்புகளிடமும் முறைகேடு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கிவிடக் கூடாது என்ற நோக்கில், அதற்குரிய கோப்புகள் இருந்த ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.