2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு
தமிழக அரசின் தொடக்க பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து வருவோர் சம வேலைக்கு சம ஊதியம் என்னும் கோரிக்கையை முன்வைத்து கடந்த 2014ம் ஆண்டில் இருந்து போராடி வருகிறார்கள். கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இன்னமும் குறைந்த சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அவர்களுக்கு ஒரு நாள் முன்பாக பணியில் சேர்ந்தோருக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தோரும், தாங்களும் ஒரே வேலையை செய்து வரும் பட்சத்தில், சம்பளத்தில் மட்டும் ஏன் வேறுபாடு? என்று தங்கள் குறைகளை எடுத்து கூறி, கடந்த 8 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியைகள் தங்கள் கைக்குழந்தைகளுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபாடு
இந்நிலையில், இந்த கோரிக்கையினை வலியுறுத்தி நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டத்தினை துவங்கினர். இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியைகள் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்திருந்த நிலையில், அனைவரும் நேற்று இரவு அங்கேயே படுத்து உறங்கியுள்ளார்கள். இரண்டாவது நாளாக இன்றும் இப்போராட்டம் நீடிக்கும் பட்சத்தில், அனைவரும் சோர்வாக காணப்பட்டனர். இவர்களுள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வசந்தி மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த கவிதா என்பவர்கள் மயக்கம் அடைந்ததால், அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.