திருமணமான பெண்களுக்கு நடத்தப்பட்ட அழகி போட்டியில் பட்டம் வென்ற சென்னை பெண்மணி
பெண்கள் என்றாலே அழகு தான், இந்நிலையில் திருமணமான பெண்களுக்கு என்று பிரத்யேகமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஓர் அழகி போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் நோக்கத்துடன் 100க்கும் மேற்பட்ட திருமணமான பெண்கள் பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்திருந்தனர். அதன்படி இப்போட்டியில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த மீனா கல்யாண் என்னும் பெண்மணியும் பங்கேற்றார். பல கட்டங்களாக நடத்தப்பட்ட இப்போட்டியில் மீனா கல்யாண் தொடர்ந்து முன்னேறி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் இறுதி சுற்றிற்கும் முன்னேறிய நிலையில், இந்தியாவின் கலாச்சாரம் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தி இந்த அழகி போட்டியில் பட்டத்தை வென்றுள்ளார். அழகி போட்டியின் பட்டத்தை வென்ற இவர் சென்னை திரும்பிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.
'என் லட்சியத்தை அடைந்து விட்டேன்' - மீனா கல்யாண்
அப்போது அவர் பேசுகையில், 'எனக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்தது. அதன் பின்னர் எனது உடலும் பருமனாகி விட்டது. பலரும் எனது உடல் பருமனை பார்த்து கேலி செய்தார்கள்' என்று கூறினார். மேலும் பேசிய அவர், 'உடல் பருமனை குறைக்கும் படியும் பலரும் எனக்கு அறிவுரை செய்தனர். இதனால் எனக்கு மன அழுத்தம் அதிகரித்தது' என்று தெரிவித்தார். தொடர்ந்து, 'இதனால் எதையாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணிய நான், சாதித்தால் மட்டுமே ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தில் இருந்து வெளிப்பட முடியும் என்றும் கருதினேன்' என்றும், 'இதனால் மனம் தளராது பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றேன். என் லட்சியத்தையும் அடைந்து விட்டேன்' என்றும் மகிழ்ச்சியாக தெரிவித்தார்.