80-வது சுதந்திர தின விழா: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதன்முறையாக கொடியேற்றவுள்ளார் முதல்வர் விஜய்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ள விழாவில், தமிழக முதல்வர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றவுள்ளார். இது முதல்வராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் முதல்வரின் உரையை கேட்க ஆர்வமாக உள்ளனர். இந்த உரையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் உத்தரவின் பேரில், சுதந்திர தின விழா எவ்வித இடையூறுமின்றி பாதுகாப்பாக நடைபெறும் வகையில் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தீவிர கண்காணிப்பு
மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சென்னையின் முக்கிய மற்றும் உணர்வுப்பூர்வமான இடங்களில் கூடுதல் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுத் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து முனையங்கள், மெட்ரோ இரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடற்கரைகள்* வழிபாட்டுத் தலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் (VIP) உலவும் பகுதிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
சோதனை
ஹோட்டல்கள், லாட்ஜ்களில் சோதனை மற்றும் ரோந்து தீவிரமாக்கம்
நகரம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் சத்திரங்களில் காவல்துறையினர் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகத்திற்கு இடமான நபர்களோ அல்லது நீண்ட நேரமாக கைவிடப்பட்ட வாகனங்களோ தென்பட்டால் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் இரவு நேர ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நகரின் முக்கியச் சந்திப்புகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.