Page Loader
சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார்
சர்வதேச புத்தக கண்காட்சி

சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார்

எழுதியவர் Nivetha P
Dec 27, 2022
10:27 pm

செய்தி முன்னோட்டம்

ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியை இந்தாண்டு சர்வதேச புத்தக கண்காட்சியாக நடத்தப்போவதாக ஏற்கனவே தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் 46வது ஆண்டின் புத்தகக் கண்காட்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி துவங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சர்வேதேச புத்தகக் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைக்கப்போவதாக, புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 800 அரங்குகள் கொண்டு அமைக்கப்படவுள்ள இந்த கண்காட்சி ஜனவரி 22ம் தேதி வரை நடக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

திருநங்கைகளுக்கும் ஓர் விற்பனையகம் ஒதுக்கப்போவதாக தகவல்

இந்தாண்டு புத்தகக்கண்காட்சியை காண பல வாசிப்பாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பு

தொடர்ந்து பேசிய அவர், "தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடத்தப்படவுள்ள இந்த கண்காட்சியில், அனைத்து புத்தக பதிப்பாளர்களின் புத்தகங்களும் இடம்பெறும். கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக வாசிப்பாளர்கள் இந்த கண்காட்சிக்கு வருவார்கள் என்பதாலும், பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு போனவர்கள் திரும்பிய பின் இந்த புத்தக கண்காட்சியை பார்க்க வரவேண்டும் என்பதாலும் தான் இந்த ஆண்டு கண்காட்சி ஜனவரி 22ம் தேதி வரை நடத்த முடிவு செய்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்தாண்டு திருநங்கைகளுக்கு ஓர் விற்பனையகம் ஒதுக்கப்போவதாகவும் அமைப்பு குழுவினர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.