பறவைக் காய்ச்சல் பீதி; சென்னையில் உயிரிழந்த காகங்களில் H5N1 வைரஸ் உறுதி; கால்நடைத்துறை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
சென்னை அடையாறு பகுதியில் கடந்த ஜனவரி மாதம் மர்மமான முறையில் உயிரிழந்த காகங்களின் உடல்களை ஆய்வு செய்ததில், அவற்றில் H5N1 வகை பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத் துறை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, சென்னை முழுவதும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடைத் துறை சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, சாலைகளிலோ அல்லது குடியிருப்புப் பகுதிகளிலோ பறவைகள் செத்துக் கிடந்தால், பொதுமக்கள் அவற்றை எக்காரணம் கொண்டும் வெறும் கையால் தொடக் கூடாது.
பாதிப்பு
மனிதர்களுக்கு பாதிப்பா?
உயிரிழந்த காகங்களை 8 முதல் 10 அடி ஆழமான குழியில் போட்டுப் புதைக்க வேண்டும் அல்லது பாதுகாப்பான முறையில் எரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பறவைகளின் அசாதாரண உயிரிழப்புகள் குறித்துத் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கோ அல்லது மாநகராட்சி அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி, சென்னையில் இந்த வைரஸ் தொற்றால் மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. இருப்பினும், பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்குத் தொற்று பரவ வாய்ப்புள்ளதால், கண்காணிப்பு மிகவும் அவசியம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாகப் பறவை வளர்ப்போர் மற்றும் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.