திருநள்ளாறு சனீஸ்வரர் பகவானின் கோலாகலமான தேரோட்டம்
தமிழ்நாடு-காரைக்கால் அருகே திருநள்ளாறில் உள்ளது உலக புகழ் பெற்ற சனீஸ்வரர் கோயில். இக்கோயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மிக விசேஷமாக கருதப்படும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். அதே போல் சனிப்பெயர்ச்சி போது லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து பூஜைகள் செய்து சனீஸ்வர பகவானை வணங்கி செல்வது வழக்கம். வெளிமாநிலம் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தருகிறார்கள். இத்தகைய பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோயிலின் பிரமோற்சவ திருவிழா கடந்த 16ம் தேதி துவங்கியது. கொடியேற்றம் செய்யப்பட்டதையடுத்து தினமும் சாமிக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சனீஸ்வர பகவான் வெவ்வேறு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
இதனை தொடர்ந்து, பிரமோற்சவ விழாவினை முன்னிட்டு நேற்று(மே.,30) பஞ்சமூர்த்திகள் சகோபுர வீதி உலா நடைபெற்றது. இதனையடுத்து, இந்த திருவிழாவின் உச்சமான தேரோட்டம் இன்று(மே.,30) காலை அரங்கேறியது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உற்சவர் தேரில் எழுந்தருளினார். தமிழ்நாடு மாநிலம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக கூடி பக்தி கோஷங்களை எழுப்பி தேரினை இழுத்து சென்றனர். இக்கோயிலின் தேரோட்ட திருவிழாவினை முன்னிட்டு இன்று திருநள்ளாறு பகுதிகளில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த தேரோட்டத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.