'சந்திராயன்-3 ஜூலையில் ஏவப்படும்': இஸ்ரோ தலைவர்
சந்திரயான்-3 விண்கலம் இந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்(இஸ்ரோ) தலைவர் சோமநாத் இன்று(மே 29) தெரிவித்தார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து இரண்டாம் தலைமுறை வழிசெலுத்தல் செயற்கைக்கோள் NSV-01 இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனையடுத்து, பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், "சந்திராயன்-3 இந்த ஆண்டு ஜூலையில் ஏவப்படும்," என்று செய்தி நிறுவனமான ANI இடம் கூறினார். சந்திரயான்-3 என்பது சந்திரயான்-2க்கு அடுத்தபடியான திட்டமாகும். இதன் மூலம் சந்திரனில் பாதுகாப்பாக தரையிறங்கி, சவாரி செய்ய இந்தியா முயற்சிக்கும். இது லேண்டர் மற்றும் ரோவர் கட்டமைப்பைக் கொண்டிருக்கும். மேலும், இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்-தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்விஎம்3 மூலம் ஏவப்படும்.
சந்திரயான் -2 வெற்றிகரமாக 2019இல் ஏவப்பட்டது
நிலவின் மேற்பரப்பில் சோதனைகளை மேற்கொள்ள, சந்திரயான்-3இன் லேண்டர் மற்றும் ரோவரில் அறிவியல் பேலோடுகள் இருக்கும். கோள்களுக்கிடையேயான பயணங்களுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி நிரூபிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். லேண்டர், ஒரு குறிப்பிட்ட சந்திர தளத்தில் மென்மையாக தரையிறங்குபடி வடிவமைக்கப்பட்டிருக்கும். அது அங்கு தரையிறங்கியதும், சந்திர நிலப்பரப்பில் இரசாயன பகுப்பாய்வு செய்ய தொடங்கும். சந்திரயான் -2 வெற்றிகரமாக 2019இல் ஏவப்பட்டு நிலவின் சுற்றுப்பாதையில் செருகப்பட்டது. ஆனால் அதன் லேண்டர் செப்டம்பர் 6, 2019 அன்று தரையிறங்க முயன்றபோது, சாஃப்ட்வேர் கோளாறால் அதன் பாதையில் இருந்து விலகி சந்திரனின் மேற்பரப்பில் மோதியது.