டெல்லி அவசர சட்டம் தொடர்பான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது
செய்தி முன்னோட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று(ஆகஸ்ட் 1) டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு மசோதா(திருத்தம்) -2023ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
டெல்லியில் அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கும் இடமாற்றுவதற்கும், யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்ற பிரச்சனை மத்திய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் இடையே பல மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அரசாங்க அதிகாரிகளின் சேவைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான சர்ச்சைக்குரிய அவசரச் சட்டத்தை ஏற்கனவே மத்திய அரசு டெல்லியில் அமல்படுத்தியுள்ளது.
அந்த அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்க தற்போது பாஜக அரசு இந்த புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய அமித்ஷா, "டெல்லியில் எந்தச் சட்டத்தையும் போடுவதற்கு நாடாளுமன்றத்துக்கு உரிமை உள்ளது" என்று கூறினார்.
ஜிவ்க்க்கே
டெல்லி அரசாங்கத்திற்கு எதிரான மத்திய அரசின் மசோதா
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலையிலான டெல்லி அரசுக்கு தான், டெல்லியில் அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கும் இடமாற்றுவதற்கும் அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கியது.
இது நடந்து சில நாட்களுக்குள், ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு, அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கும் இடமாற்றுவதற்கும் மத்திய அரசுக்கு அதிகாரத்தை வழங்கியது. இதனால், இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையும் ஏற்பட்டது.
அதையே தான், இந்த புதிய மசோதாவும் கூறுகிறது.
டெல்லியில் அரசாங்க அதிகாரிகளை நியமிப்பது, இடைநீக்குவது, இடம் மாற்றுவது போன்ற நடவடிக்கைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று இந்த புதிய மசோதா முன்மொழிகிறது.