இந்தியாவில் பயில வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய வலைதளம் அறிமுகம்
இந்திய நாட்டில் உயர்கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்களின் வசதிக்காக மத்திய அரசு ஒரு புதிய வலைதளத்தினை கடந்த 2ம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது. 'இந்தியாவில் கல்வி (எஸ்ஐஐ)' என்னும் வலைதளம் மூலம் வெளிநாட்டு மாணவர்களின் நடைமுறைகள் மற்றும் பயணம் எளிதாக்கப்படும் என்று கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற இந்த அறிமுக நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் இணைந்து இந்த வலைதளத்தினை அறிமுகம் செய்துள்ளனர். அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஜெய்சங்கர், "பல பின்னணியில் உள்ள மாணவர்களை வரவேற்கும் பொருட்டு, இந்தியாவினை உலகளாவிய கல்வியின் மையமாக மாற்றுவதின் நோக்கமாகவே இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
விண்ணப்பப்பதிவு, விசா அனுமதி பதிவு உள்ளிட்டவற்றை எளிதாக பெறலாம்
தொடர்ந்து, சர்வதேச மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்புகளை தேர்வு செய்யவும், அதனுடன் தொடர்பில் உள்ள நிறுவனங்களிலுருந்து சலுகைகளை பெறவும் இது உதவும் என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இந்த இணையதளம் இந்தியாவை விருப்பமான கல்வி இடமாக மாற்றவும், நல்ல எதிர்காலத்தினை வடிவமைக்க கல்வி எல்லைகளை விரிவுபடுத்தும் எங்கள் உறுதிப்பாட்டினை பிரதிபலிக்கிறது. உயர்கல்விக்கான விருப்பமான இடமாக மாணவர்கள் இந்தியாவை தேர்ந்தெடுக்க இந்த வலைதளம் ஒரு முக்கிய படியாக இருக்கும்" என்று கூறியுள்ளார். இந்த வலைதளம் மூலம் வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் உயர்கல்விக்கான விண்ணப்பப்பதிவு, விசா அனுமதி பதிவு உள்ளிட்டவற்றை எளிதாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.