கேரள மக்களை பாதுகாக்கவே பாப்புலர் பிரண்ட்'க்கு மத்திய அரசு தடை விதித்தது - அமித்ஷா
கேரள மாநிலம் திருச்சூரில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் பேசியதாவது, கேரள மாநில மக்களை பாதுகாக்கவே பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு மத்திய அரசினை ஆளும் பிரதமர் மோடி தடை விதித்துள்ளார். இது தேசிய பாதுகாப்பினை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும். ஆனால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வாக்கு வாங்கி அரசியல் நடத்துவதால் இதனை விரும்பவில்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கேரள அரசியலில் எதிரெதிரே இருந்த நிலையிலும், திரிபுராவில் இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டாக போட்டியிட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
மோடி ஆட்சியில் இந்திய மக்கள் பாதுகாப்பாக உள்ளார்கள் - அமித்ஷா
இதனை தொடர்ந்து பேசிய அவர், கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடி செய்யும் ஆட்சியில் இந்திய மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். அதே நேரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டிய தீவிரவாதம் தலைவிரித்து ஆடியது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த கட்சி பொதுக்கூட்டத்தில், நடிகரும் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யுமான சுரேஷ் கோபி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன். இல்லையெனில் கம்யூனிஸ்டுகள் பலம் கொண்டதாக கருதப்படும் கண்ணூர் தொகுதியை கொடுத்தாலும் நான் போட்டியிட தயார் என்று மேடையிலேயே அமித்ஷாவிடம் சீட் கேட்டது குறிப்பிடத்தக்கது.