CBSE பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு: 85.20% மாணவர்கள் தேர்ச்சி, ரிசல்ட் பார்ப்பது எப்படி?
செய்தி முன்னோட்டம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-ம் ஆண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. சுமார் 18 லட்சம் மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த முடிவுகள், தற்போது DigiLocker மற்றும் UMANG செயலி வாயிலாகக் கிடைக்கிறது. இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 85.20% ஆக உள்ளது. இது கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதமான 88.39%-ஐ விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். மாணவியர் தேர்ச்சி: 88.86% மாணவர்கள் தேர்ச்சி: 82.13% மாணவர்களை விட மாணவியர் 6.73% கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மண்டலங்கள்
சிறந்த மற்றும் குறைந்த தேர்ச்சி பெற்ற மண்டலங்கள்
மண்டல வாரியான தேர்ச்சிப் பட்டியலில் திருவனந்தபுரம் மண்டலம் 95.62% தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு நேர்மாறாக, பிரயாக்ராஜ் மண்டலம் 72.43% தேர்ச்சியுடன் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. மாணவர்கள் பின்வரும் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாகத் தங்களது மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்: results.cbse.nic.in cbseresults.nic.in cbse.gov.in தேர்வு முடிவுகளைப் பார்க்க மாணவர்கள் தங்களது பதிவு எண் (Roll Number), பள்ளி எண், அனுமதி அட்டை ஐடி மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். மாணவர்கள் தங்களது டிஜிலாக்கர் கணக்கு அல்லது உமங் செயலி மூலம் டிஜிட்டல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், எஸ்எம்எஸ் (SMS) மற்றும் ஐவிஆர்எஸ் (IVRS) வசதி மூலமும் முடிவுகளைத் தெரிந்து கொள்ள வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.