மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கு - மனுதாரருக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்
மதுரை மாநகரை சேர்ந்த ஸ்டாலின் பாஸ்கர் என்னும் வழக்கறிஞர் மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின்படி, 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்து வந்த நிலையில் மேலூர் தேர்தல் அதிகாரி மற்றும் தாசில்தாருமான காளிமுத்து என்பவர் தன்னை மு.க.அழகிரி தரப்பினர் தாக்கியதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் கிட்டத்தட்ட 21 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. 2020ல் இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அரசியல் செல்வாக்கு இருக்கும் காரணத்தினால் இந்த வழக்கை மூடி மறைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. எனவே, இந்த வழக்கின் விசாரணையினை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
'மனுதாரரின் இந்த மனு சாகசமிக்கதாக பார்க்கப்படுகிறது' - நீதிபதிகள்
அதன்படி இந்த வழக்கின் விசாரணையானது உச்ச நீதிமன்றம் நீதிபதிகளான சஞ்சய் கரோல் மற்றும் ரிஷிகேஷ் ராய் உள்ளிட்டோர் முன்னிலையில் நேற்று(அக்.,17) வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'மதுரையில் நடக்கும் இந்த குற்ற வழக்கால் அரசு தரப்புக்கோ அல்லது மனுதாரர் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை' என்று குறிப்பிட்டனர். மேலும் அவர்கள், 'இந்த வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரும் இந்த வழக்கும் ஏற்புடையதல்ல' என்றும் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, மனுதாரரின் இந்த மனு சாகசமிக்கதாக பார்க்கப்படுகிறது. இதனால் மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.