"ஆஃப் பாயில் வேண்டவே வேண்டாம்!": பறவை காய்ச்சல் எதிரொலியாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
சென்னை அடையாறு பகுதியில் உயிரிழந்த காகங்களை ஆய்வு செய்ததில், அவற்றுக்கு 'H5N1' வகை பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். மத்திய சுகாதாரத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "காகங்கள் அல்லது இதர பறவை இனங்கள் திடீரென உயிரிழப்பதை கண்டால், பொதுமக்கள் அவற்றை வெறும் கைகளால் தொடக்கூடாது. உடனடியாக ஆழமான குழி தோண்டி புதைக்க வேண்டும் எனப் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது," என்றார்.
அறிவுறுத்தல்
இறைச்சி பிரியர்களுக்கு அறிவுறுத்தல்
கோழி இறைச்சி உண்பவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கியக் கட்டுப்பாடுகளை அமைச்சர் பட்டியலிட்டுள்ளார்: திடீரென உயிரிழக்கும் கோழிகளை எக்காரணம் கொண்டும் உணவிற்குப் பயன்படுத்தக் கூடாது. கோழி இறைச்சியை சமைக்கும்போது அதிக வெப்பநிலையில் முழுமையாக வேகவைத்து சாப்பிட வேண்டும். குறிப்பாக, 'ஆஃப் பாயில்' (Half Boil) போன்ற அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய அமைச்சர், மாவட்ட அளவில் விழிப்புணர்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.