எங்களோடு இருப்பது தான் பாஜக'வுக்கு பலம் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
அப்போது அவரிடம் தமிழகத்தில் கடந்த 1991-1996வரையிலான ஆட்சிக்காலம் ஊழலைப்பொருத்து மோசமானது என்பதனை ஒப்புக்கொள்வீர்களா? என்று கேள்வியெழுப்பட்டுள்ளது.
அதற்கு அவர், "தமிழகத்தில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாகவே இருந்துள்ளது.
முன்னாள் முதல்வர்கள் ஊழல் குற்றத்திற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவில் ஊழல்மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்றுக்கூட கூறுவேன்" என்று கூறியிருந்தார்.
இவரது இப்பதில் அதிமுக'வினரை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர், "அண்ணாமலை கூட்டணி தர்மத்தினைமீறி பேசுகிறார்.
அண்ணாமலை சற்று நாவடக்கத்துடன் பேசுவது நல்லது.
இவரின் செயல்பாடு அதிமுக-பாஜக கூட்டணி வேண்டாம் என்பதுபோல் உள்ளது" என்று கூறியுள்ளார்.
பேட்டி
அதிமுக ஆலமரம், பாஜக'வோ வெறும் செடி தான் - ஜெயக்குமார்
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், "கத்துக்குட்டியான அண்ணாமலைக்கு வரலாறும் தெரியவில்லை, பாரம்பரியமும் தெரியவில்லை.
அரசியலில் அதிமுக ஆலமரம், பாஜக'வோ வெறும் செடி தான்.
கூட்டணியில் இருக்கும் பட்சத்தில் எங்கள் நிழலில் தான் இருக்கவேண்டும்.
கூட்டணியில் என்ன பேசினாலும் அமைதியாக இருக்க நாங்கள் மற்றவர்களை போல் சூடு, சொரணை இல்லாதவர்கள் அல்ல.
எங்கள் கட்சியின் தலைவி ஜெயலலிதாவை பற்றி இவர் என்ன வேணாலும் பேசலாமா? இவரை ஜே.பி.நட்டாவும், அமித்ஷா அவர்களும் தான் கண்டிக்க வேண்டும்.
எங்கள் நிழலில் இருப்பதால் தான் பாஜக'வுக்கு 4 எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்துள்ளார்கள்.
அந்த நன்றியினை அண்ணாமலை மறக்க கூடாது.
கூட்டணி குறித்து மறுபரிசீலனை என்பது எனது தனிப்பட்ட கருத்து அல்ல, ஒட்டுமொத்த கட்சியின் கருத்து" என்று அவர் ஆவேசமாக பேசியுள்ளார்.