Page Loader
பிபிசி பஞ்சாப் ட்விட்டர் கணக்கு முடக்கம்: இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக குற்றசாட்டு
இருப்பினும், சட்டக் கோரிக்கை என்னவென்ற விவரங்கள் தெரியவில்லை.

பிபிசி பஞ்சாப் ட்விட்டர் கணக்கு முடக்கம்: இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக குற்றசாட்டு

எழுதியவர் Sindhuja SM
Mar 28, 2023
12:00 pm

செய்தி முன்னோட்டம்

காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கை போலீஸார் தீவிரமாக தேடிவரும் நிலையில், பிபிசி பஞ்சாபி செய்தியின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. "சட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில்" கணக்கு அகற்றப்பட்டதாக அந்த ட்விட்டர் கணக்கில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், சட்டக் கோரிக்கை என்னவென்ற விவரங்கள் தெரியவில்லை. தீவிர போதகர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுத்தபோது கைது செய்யப்பட்ட அனைத்து சீக்கிய இளைஞர்களையும் விடுவிக்குமாறு அகல் தக்த் ஜதேதார் கியானி ஹர்ப்ரீத் சிங் திங்களன்று மாநில அரசுக்கு 24 மணிநேர இறுதி எச்சரிக்கையை வழங்கினார். இதனையடுத்து, இந்த ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அம்ரித்பால் தலைமையிலான 'வாரிஸ் பஞ்சாப் டி' இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு எதிரான நடவடிக்கை கடந்த வாரம் தொடங்கியது.

பஞ்சாப்

முடக்கப்பட்டுள்ள செய்தி நிறுவனங்களின் கணக்குகள்

பஞ்சாப் காவல்துறை அம்ரித்பால் சிங்கைத் தேட தொடங்கியதில் இருந்து, பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தி இணையதளங்களின் பல சமூக ஊடக கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. எத்தனை கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. தடுக்கப்பட்ட கணக்குகளில் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் உரிமை ஆர்வலர்களின் கணக்குகளும் அடங்கும். அமிர்தசரஸில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸின் மூத்த ஊழியர் கமல்தீப் சிங் ப்ரார் மற்றும் நிறுவனம் சாரா பத்திரிகையாளர்கள் ககன்தீப் சிங் மற்றும் சந்தீப் சிங் ஆகியோரின் சமூக ஊடக கணக்குகள், குறைந்தது மூன்று முக்கிய பத்திரிகையாளர்களின் சமூக ஊடக கணக்குகள் ஆகியவை இடைநிறுத்தப்பட்டுள்ளன. செய்தி இணையதளமான Baaz Newsஇன் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. மேலும், சங்ரூர் எம்பி சிம்ரன்ஜித் மானின் கணக்கும் ட்விட்டர் மூலம் முடக்கப்பட்டுள்ளது.