
மகளிர் உரிமை தொகையில் பிடித்தம் செய்ய கூடாது - வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் கடந்த செப்டம்பர் 15ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை துவக்கி வைத்தார்.
இந்த திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1000 டெபாசிட் செய்யப்படும்.
இதன் மூலம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயனடையவுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில் இந்த திட்டத்தின் மூலம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட ரூ.1,000ல் இருந்து சேவை கட்டணம் என்னும் பெயரில் சில வங்கிகள் பணத்தை பிடித்தம் செய்ததால், குறைந்த அளவிலான தொகையே பயனாளர்களுக்கு சென்று சேர்ந்ததாக புகார்கள் எழுந்தது.
அமைச்சர்
முதல்வர் உதவிமைய தொலைபேசி எண் மூலம் புகாரளிக்கலாம் - நிதியமைச்சர்
இதனை தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணத்தில் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்ய கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், மகளிர் உரிமைத்தொகை கீழ் வரவு வைக்கப்படும் பணத்தில் பிடித்தம் செய்ய கூடாது என்று தமிழக அரசுக்கும், வங்கிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை மீறினால் அந்த வங்கியின் பண பரிவர்த்தனை வேறுவங்கிக்கு மாற்றப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இது போன்று உரிமை தொகையில் பிடித்தம் செய்யும் வங்கிகள் குறித்து புகாரளிக்க 1100 என்னும் முதல்வர் உதவிமைய தொலைபேசி எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.