அரசுத் துறைகளில் 70,000-க்கும் அதிகமான லஞ்சப் புகார்கள்; வங்கிகள், இரயில்வேயில் தான் அதிகமா?
செய்தி முன்னோட்டம்
மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்(CVC) வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையின்படி, அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராக 70,500-க்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் வங்கிகள் மற்றும் இரயில்வே துறைகள் அதிக அளவிலான புகார்களை பெற்று முதலிடத்தில் உள்ளன. 2025ஆம் ஆண்டில் முதன்மை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு மொத்தம் 70,584 புகார்கள் வந்தடைந்தன. அதில் டிசம்பர் 31,2025 வரை 64,905 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 5,679 புகார்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், அதில் 2,002 புகார்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்பதால், நிலுவையில் உள்ள வழக்குகளை சீக்கிரமாக முடிக்க CVC தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
துறைகள்
அதிக புகார்களை பெற்ற முக்கியத் துறைகள்
வங்கிகள் அதிகபட்சமாக 9,933 புகார்கள் பெறப்பட்டு, அதில் 9,520 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன. அவற்றுள் 413 புகார்கள் நிலுவையில் உள்ளன.
இரயில்வே துறையை பொறுத்த வரை 9,381 புகார்களைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதில் 8,754 புகார்கள் தீர்க்கப்பட்டு, 627 புகார்கள் நிலுவையில் உள்ளன.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மீது 6,531 புகார்களும், டெல்லி தவிர்த்த பிற உள்ளாட்சி அமைப்புகள் மீது 4,834 புகார்களும் பதிவாகியுள்ளன.
விவரம்
பிற துறைகளின் புகார்கள் விவரம்
நிலக்கரித் துறை மீது 4,118 புகார்களும், நிதித்துறை மீது 3,107 புகார்களும், டெல்லி அரசு மீது 2,804 புகார்களும் வந்துள்ளன.
மேலும் பெட்ரோலிய அமைச்சகம் (2,722), டெல்லி காவல் துறை (2,633), சாலைப் போக்குவரத்து (2,139) மற்றும் உள்துறை அமைச்சகம் (2,036) ஆகிய துறைகளும் கணிசமான ஊழல் புகார்களை எதிர்கொண்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் ஊழியர்களிடமிருந்து பெறப்படும் புகார்களை விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்கத் தேவையான நடவடிக்கைகளைச் சி.வி.சி தீவிரப்படுத்தியுள்ளது.