எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள், மக்கள் நலனுக்காக தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். "பிரதமரை நீங்கள் விரும்பினாலும் சரி, அவரைப் பார்க்கப் பிடிக்காவிட்டாலும் சரி... எதுவாக இருந்தாலும் ஜனநாயகக் கோவிலை மதிக்க வேண்டும். ...மக்கள் பிரச்சனைகளை விவாதிக்கும் ஜனநாயக கோவிலை புறக்கணிப்பது நல்லதல்ல. ...குறைந்த பட்சம் மக்களுக்காக, விழாவில் பங்கேற்கவும்" என்று நிர்மலா சீதாராமன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நாகாலாந்து ஆளுநர் லா.கணேசன், மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் முன்னிலையில் சீதாராமன் செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார்.
இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: பிரதமர் மோடி
திறப்பு விழாவிற்கு தமிழகத்தில் உள்ள 20 ஆதீனங்களின் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் நாடாளுமன்ற சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் தமிழகத்தை சேர்ந்த செங்கோல் நிறுவப்படும் என்றும் சீதாராமன் கூறியுள்ளார். மவுண்ட்பேட்டன் பிரபு ஆகஸ்ட்-14, 1947அன்று இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் வெள்ளி மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட ஐந்து அடி நீள செங்கோலை அதிகார பரிமாற்றத்தின் அடையாளமாக ஒப்படைத்தார். எனவே, இது தமிழருக்கான பெருமை என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் ஏன் திறந்து வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய 21 எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாக அறிவித்தன. இந்த எதிர்க்கட்சிகளில் தமிழகத்தின் திமுக கட்சியும் அடங்கும். இதை "ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்" என்று பிரதமர் மோடி விமர்ச்சித்திருந்தார்.