தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணியினர் உள்ளிட்ட 4 பேர் கைது
தமிழகத்தில் புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தநிலையில், சில வீடியோ பதிவுகளும் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் வட்டாரமும், தமிழக காவல் துறையும் மறுப்பு தெரிவித்ததோடு, அது சம்பந்தமான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. இந்நிலையில் கோவையில் இடையர் வீதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளி கெளதம் சியாமல் கட்டுவா என்பவர் தனது நண்பர்கள் தனமாய் ஜனா, ஜெகத் ஆகியோருடன் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்தப்பக்கம் வந்த இந்து முன்னணி அமைப்பினை சேர்ந்த சூரியபிரகாஷ், பிரகாஷ் ஆகியோரும், கல்லூரி மாணவர்கள் பிரகதீஷ், வேல்முருகன் ஆகியோரும் நடந்து வந்துள்ளார்கள். தொடர்ந்து, கெளதம் சியாமல் மற்றும் அவருடன் வந்தவர்கள் தங்களுக்கு வழிவிடாமல் சென்றதாகக்கூறி சூரியபிரகாஷும் அவருடன் வந்தவர்களும் தாக்கியுள்ளார்கள்.
புகாரின் பேரில் கைது செய்த காவல் துறை
மேலும் பானிபூரி கடையில் இருந்த மோனோ, ஷேக சவான் உள்ளிட்ட மேற்கு வங்க மாநிலத்தவரையும் சூர்ய பிரகாஷ் கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தாக்குதல் நடப்பது குறித்த தகவல் கிடைத்ததும் மேற்குவங்க மாநில தொழிலாளர்கள் அங்கு ஒன்று திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கௌதம் சியாமல் கட்டுவா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், இந்து முன்னணியை சேர்ந்த சூரிய பிரகாஷ், பிரகாஷ் ஆகியோரும், கல்லூரி மாணவர்கள் பிரகதீஷ், வேல்முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.