LOADING...
2031ல் மற்றுமொரு ஆட்சி மாற்றம் நிச்சயம்: பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை தவெக ஆட்சியை விமர்சிக்காதது ஏன்?
பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை அதிரடி பேச்சு

2031ல் மற்றுமொரு ஆட்சி மாற்றம் நிச்சயம்: பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை தவெக ஆட்சியை விமர்சிக்காதது ஏன்?

எழுதியவர் Sekar Chinnappan
Jul 12, 2026
08:10 pm

செய்தி முன்னோட்டம்

வீ த லீடர்ஸ் இயக்கத்தின் சார்பில் பொள்ளாச்சியில் இன்று (ஜூலை 12) நடைபெற்ற போதைப்பொருள் இல்லாத தமிழகம் மாநாட்டில் அவ்வியக்கத்தின் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வரும் 2031 ஆம் ஆண்டில் தமிழக மக்கள் முன்பு தங்களுடைய புதிய அரசியல் கட்சி அதிகாரப்பூர்வமாக நிற்கும் என்று அதிரடியாக அறிவித்தார். மேலும், இளைஞர்கள் 2026ல் தமிழகத்தில் ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்கியதைப் போல, 2031ல் மற்றுமொரு மாபெரும் ஆட்சி மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவார்கள் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

எதிர்கால இலக்குகள்

வீ த லீடர்ஸ் இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் எதிர்கால இலக்குகள்

தற்பொழுது தங்களது வீ த லீடர்ஸ் இயக்கத்தில் 19 லட்சம் பேர் இணைந்துள்ளதாகவும், எந்தவொரு அழைப்பும் இன்றி மக்கள் தன்னார்வமாக இதில் இணைந்து வருவது தமிழகத்தில் நல்லது நடப்பதற்கான அறிகுறி என்றும் அண்ணாமலை தெரிவித்தார். இந்த எண்ணிக்கை 50 லட்சமாக உயரும் போது, தமிழக மக்கள் தங்களை அழைக்கிறார்கள் என்று பொருள் எனக் குறிப்பிட்ட அவர், அடுத்த 6 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு முக்கியப் பிரச்சினையை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப் போவதாகவும் கூறினார்.

இயக்கத்தின் புள்ளிவிபரங்கள்

இயக்கத்தின் தற்போதைய புள்ளிவிவரங்களும் பெண்களுக்கான முக்கியத்துவமும்

தங்களது அமைப்பில் இணைந்துள்ள 19 லட்சம் பேரில் 83 சதவீதம் பேர் ஆண்கள் என்றும், 17 சதவீதம் பேர் பெண்கள் என்றும் அண்ணாமலை விவரித்தார். மாற்றம் வேண்டும் என மகளிர் தங்களோடு இணைந்துள்ள நிலையில், இந்த பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதே இலக்கு என்றார். மேலும், தங்களது அமைப்பில் 54 சதவீதம் பேர் 39 வயதுக்குக் கீழுள்ள இளைஞர்களாக இருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

தவெக ஆட்சி

போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் தவெக ஆட்சி குறித்த அண்ணாமலையின் நிலைப்பாடு

இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் போதைக்கு எதிரான மாதமாக கடைப்பிடிக்கப்படும் என்றும், தற்போதைய தலைமுறையிலேயே போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியை விமர்சிப்பது குறித்துப் பேசிய அவர், 1 கோடியே 68 லட்சம் மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த இந்த ஆட்சிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றார். செங்கோட்டையனைத் தவிர தற்போதைய அமைச்சர்கள் அனைவரும் புதியவர்கள் என்பதால் தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறத்தான் செய்வார்கள் என்றும், எனவே இந்த ஆட்சியை ஒரு ஆண்டுக்குத் தாராள மனதோடு விமர்சிக்கப் போவதில்லை என்றும் அண்ணாமலை தெளிவுபடுத்தினார்.

Advertisement