சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தில் விமான சேவை துவங்கியது
கடந்த ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை தந்து ரூ.2,467 கோடி மதிப்பில் சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள விமான முனையத்தினை திறந்து வைத்தார். தற்போதுள்ள சென்னை விமான நிலையம் ஓராண்டுக்கு 23 மில்லியன் பயணிகளை கையாளுகிறது என்று கூறப்படுகிறது. அதன்படி தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள முனையத்தில் 30 மில்லியன் பயணிகளை கையாளுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஓடுதளத்தில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி சோதனை ஓட்டம் செய்யப்பட்ட நிலையில், பின்னர் சில பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனையடுத்து கடந்த மே 3ம் தேதி முதல் சிறிய ரக விமானங்களான ஏர்பஸ் 320, 321 மற்றும் போயிங் ரக 737, 738 உள்ளிட்ட விமானங்கள் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வந்தது.
அடுத்த மாதம் முழுமையாக செயல்பட துவங்கும் என தகவல்
குவைத், எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கு பகலில் சோதனை ஓட்டம் நடந்துவந்ததை தொடர்ந்து, இரவுநேரங்களிலும் சோதனை ஓட்டம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது செல்போன் சிக்னல் தடை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பின்னர் அதனை சரிசெய்ய நவீனக்கருவிகள் பொருத்தப்பட்டு, பின்னர் சோதனை ஓட்டம் தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று(ஜூன்.,12)நள்ளிரவு முதல் இந்த புதிய விமானமுனையத்தில் விமானசேவையானது துவங்கியுள்ளது. 194 இருக்கைகள் வரையுள்ள நடுத்தரவகை விமானங்கள் இங்கிருந்து இயக்கப்படவுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதன் முதல்கட்டமாக துபாய், கொழும்பு, மஸ்கட், குவைத்,அபுதாபி, தமாம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு இங்கிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பன்னாட்டு விமானங்கள் இயக்கப்படவுள்ளது என்றும், ஜூலை மாதத்திற்குள் இந்த புதிய முனையம் முழுமையாக செயல்படத்துவங்கும் என்றும் விமானநிலைய ஆணையகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.