உலகளவில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி - 7ம் இடத்தினை பிடித்த அதிமுக
உலகளவில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சிகளில் முதல் 15 கட்சிகளின் பட்டியலினை வேர்ல்டு அப்டேட்ஸ் என்னும் அமைப்பானது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் முதலிடத்தினை பாரதிய ஜனதா கட்சி பிடித்துள்ளது. அதனைத்தொடர்ந்து, 2ம்இடத்தினை சைனீஸ் கம்யூனிஸ்ட் கட்சியும், 3ம்இடத்தினை டெமோகிரெடிக் கட்சியும், 4ம்இடத்தினை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், 5ம் இடத்தில் குடியரசு கட்சியும் இடம்பிடித்துள்ளது. இந்த வரிசையில் அதிமுக கட்சி 7ம் இடத்தினை பிடித்துள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் ஆம் ஆத்மி கட்சி 9ம் இடத்தையும், தெலுங்கு தேசக்கட்சி 14வது இடத்தினையும் பிடித்துள்ளது. இந்நிலையில் முதல் 15 இடங்களில் திமுக இடம்பெறவில்லை. வேறு எந்த இடத்தினை திமுக பெற்றுள்ளது என்னும் விவரமும் பட்டியலில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
உலகில் உள்ள பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்
இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், "வேர்ல்டு அப்டேட்ஸ் அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பட்டியலில் அதிமுக 7ம் இடத்தினை பிடித்துள்ளது பெருமகிழ்ச்சியினை அளிக்கிறது" என்று கூறியுள்ளார். மேலும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சி புரட்சி தலைவி அம்மா மூலம் கட்டிக்காக்கப்பட்டு மாபெரும் எஃகு கோட்டையாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக பொது செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வீரநடையிட்டு வெற்றி கொடியினை நாட்டி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இதே போல் உலகளவில் மிக பிரபலமாக உள்ள தலைவர்கள் பட்டியலில் 76% பெற்று பிரதமர் மோடி அவர்கள் முதலிடத்தினை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.