அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த உரிமையியல் வழக்கினை ஓபிஎஸ் ஆதரவாளரான பி.எச்.மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று(மார்ச்.,3) நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக வந்தது. இதில் ஓபிஎஸ் தரப்பில் டெல்லியில் இருந்து வந்த தலைமை வழக்கறிஞரான குரு கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி கட்சியை விட்டு நீக்கும் உரிமை பொது குழுவிற்கு இல்லை. இது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்று வாதிட்டார்.
எதிர்தரப்பு விளக்கமளிக்க கால அவகாசம்
தொடர்ந்து அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. எவ்வித நோட்டிஸும் அளிக்காமல் பதவியை விட்டு நீக்கியது சட்ட விரோதமானது. கட்சியில் இருந்து நீக்குவதற்கான அஜெண்டாவும் பொதுக்குழுவில் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொதுச்செயலாளர் தீர்மானம் சட்ட விரோதமானது என்றும், ஒற்றை தலைமையை அடிப்படை தொண்டர்கள் கேட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் தொடர்ந்து வாதிட்டுள்ளார். இதனை விசாரித்த நீதிபதி, எதிர்தரப்பு வாதங்களையும் விளக்கங்களையும் கேட்காமல் பொதுக்குழு தீர்மானங்களுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளார். தொடர்ந்து எதிர்தரப்பான ஈபிஸ் மற்றும் அதிமுக இதுகுறித்து விளக்கமளிக்க 17ம் தேதிவரை கால அவகாசம் வழங்கி, வழக்கினை மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.