LOADING...
அதிமுக-வில் க்ளைமாக்ஸ் திருப்பம்: இ.பி.எஸ் - வேலுமணி அணிகள் இணைகின்றன; சி.வி.சண்முகம் நிலை என்ன?
சி.வி. சண்முகம் மட்டும் இபிஎஸ் இல்லத்திற்கு வரவில்லை

அதிமுக-வில் க்ளைமாக்ஸ் திருப்பம்: இ.பி.எஸ் - வேலுமணி அணிகள் இணைகின்றன; சி.வி.சண்முகம் நிலை என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
May 27, 2026
02:14 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாக தமிழக அரசியலையே உலுக்கி வந்த அ.தி.மு.க-வின் உட்கட்சிப் பூசல் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா படலங்கள், தற்போது ஒரு முக்கியமான க்ளைமாக்ஸ் கட்டத்தை எட்டியுள்ளன. அ.தி.மு.க-வில் நிலவி வந்த இரு அணிகளின் மோதல் முடிவுக்கு வந்து, கட்சி ஒன்றிணைவது உறுதி என்று அதிருப்தி அணியைச் சேர்ந்த லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

அதிருப்தி

தேர்தல் முடிவுகளால் கிளம்பிய அதிருப்தி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையில் 25 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தி அணியாகத் திரண்டனர். தொடர்ந்து முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில், இந்த 25 எம்.எல்.ஏ-க்களும் கட்சி மாறி த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் இபிஎஸ் தரப்பு இவர்களைத் தகுதிநீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு அளித்தது. இந்நிலையில், அதிருப்தி அணியை சேர்ந்த 4 முக்கிய எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர். இதனால் அ.தி.மு.க-வின் பலம் 47-லிருந்து 43 ஆகக் குறைந்தது. இத்தகைய சூழலில்தான், கட்சியை மேலும் பலவீனமடையாமல் தடுக்க இரு தரப்பும் மீண்டும் இணைய பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன.

ஆலோசனை

இபிஎஸ் இல்லத்தில் வேலுமணி அணி: சி.வி.சண்முகம் தனித்து விடப்படுகிறாரா?

கட்சியை ஒன்றிணைப்பதற்கான முதற்கட்டமாக, இன்று சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அலுவலகத்தில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களான லீமா ரோஸ், நத்தம் விஸ்வநாதன், கே.சி.வீரமணி ஆகியோர் கூடிப் பேசினர். எஸ்.பி.வேலுமணி தலைமையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கர், ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ லீமா ரோஸ்,"அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி தரப்பும், சி.வி. சண்முகம் - எஸ்.பி.வேலுமணி தரப்பும் ஒன்றிணைவது 100% உறுதி." என்றார். இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த உடனே, எஸ்.பி.வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ-க்கள் குழு, எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேராகச் சென்றனர். ஆனால், இந்த இணைப்புப் பேச்சுவார்த்தையில் மிக முக்கியத் திருப்பமாக, சி.வி. சண்முகம் மட்டும் இபிஎஸ் இல்லத்திற்கு வரவில்லை

Advertisement

சந்தேகம்

EPS -ஐ சந்திக்க செல்லாத சி.வி.சண்முகம்

எஸ்.பி.வேலுமணி தரப்பு எடப்பாடியுடன் சமரசம் செய்துகொள்ளத் தயாராகிவிட்ட நிலையில், தீவிர இபிஎஸ் எதிர்ப்பைக் காட்டி வந்த சி.வி. சண்முகம் இதில் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதனால், அவர் அ.தி.மு.க-வில் தனித்து விடப்படுகிறாரா அல்லது அவரது அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற விவாதம் கிளம்பியுள்ளது. சி.வி.சண்முகமும் தனது MLA பதவியை ராஜினாமா செய்ய போகிறார் என்ற பேச்சும் கிளம்பியுள்ளது.

Advertisement