அதிமுக பாஜக இடையேயான கூட்டணி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக இடைக்கால பொது செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவர், ஓபிஎஸ் கட்சி நடத்தவில்லை, கடை நடத்துகிறார். அதனால் தான் கொஞ்சமும் நாகரிகம் இன்றி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும், கட்சியின் லெட்டர்பேடை உபயோகிக்கிறார் என்று கூறினார். தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு நிகரானவர் எவரும் இவ்வுலகில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டத்தில் லோக்சபா தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது - ஜெயக்குமார்
அதனை தொடர்ந்து, தனது தாய் மற்றும் மனைவியுடன் ஜெயலலிதாவை ஒப்பிட்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்துக்குள் செல்ல விரும்பவில்லை. அது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்தார். மேலும் அதிமுக, பாஜக இடையே எவ்வித மோதலும் இல்லை என்றும் கூறிய அவர், எங்கள் கூட்டணி தொடர்ந்து தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதில் அதிமுக 100 சதவிகிதம் உறுதியாக உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதற்கிடையே நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் பொது செயலாளர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தவில்லை, லோக்சபா தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்பதையும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.