பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள்
2002 குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது, அதானி குழுமம் மற்றும் அதன் பொருளாதார பிரச்சனைகள் தொடர்பான சமீபத்திய சர்ச்சைகள் பற்றி பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் பேச வேண்டும் என்று தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இன்று(ஜன 31), 2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்ட தொடர் நாடாளுமன்றத்தில் தொடங்குகிறது. இது பற்றி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து முக்கிய விஷயங்களிலும் காங்கிரஸுக்கு ஆதரவளிக்குமாறு திமுக எம்பிக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், அதானி குழும பிரச்சனைகள், பிபிசி ஆவணப்படம், சேது சமுத்திர திட்டம், நீட் தேர்வுக்கான எதிர்ப்பு போன்றவற்றை பற்றி நாடாளுமன்றத்தில் பேசுமாறு திமுக எம்பிகளிடம் ஸ்டாலின் கேட்டு கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திமுக
நீட் தேர்வுக்கு எதிரான மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில், சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவை குறித்து, பிற கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்குமாறு எம்பிகளிடம் வலியுறுத்திய ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் திட்டம், மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து, தமிழக மீனவர்களுக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையேயான மோதல் போன்றவை குறித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் திமுகவின் கருத்துகள் நன்கு கேட்கப்படுவதை உறுதி செய்யுமாறு எம்பிக்களிடம் கூறிய திமுக மூத்த தலைவர்கள், செய்தியாளர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.