தமிழக பாஜக புதிய தலைவராக நடிகர் சரத்குமார் நியமனம்? நயினார் நாகேந்திரனுக்கு மாற்றாக தீவிரப் பரிசீலனை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகளை தொடர்ந்து, தமிழ்நாட்டின் பாஜக அமைப்பில் மாற்றங்களை செய்ய தேசிய தலைமை திட்டமிட்டு வருகிறது. இதன் பகுதியாக, தற்போதைய மாநில தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனை மாற்றிவிட்டு, நடிகர் சரத்குமாரை தமிழக பாஜகவின் புதிய தலைவராக நியமிக்க பாஜக மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மாற்றம்
பாஜகவில் மாற்றம் ஏன்?
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக எதிர்பார்த்த அளவிலான வெற்றியைப் பெறத் தவறியதைத் தொடர்ந்து, தமிழக பாஜகவின் உள்கட்சிச் செயல்பாடுகள் மற்றும் தேர்தல் தோல்வி குறித்து ஆராய தேசிய தலைமை சார்பில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தற்போதையத் தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் குறித்துக் கட்சி மேலிடத்தில் அதிருப்தி நிலவி வருவதால், அவரை மாற்ற பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நடிகர் விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திரைத்துறை பின்னணி கொண்ட தலைவர்கள் அரசியல் களத்தில் தீவிரமாக இருக்கும் சூழலில், தமிழக மக்களிடையே நன்கு அறிமுகமான ஒரு பிரபல முகத்தைக் கட்சியின் அடையாளமாக முன்நிறுத்த மேலிடம் விரும்புகிறது.
முக்கியத்துவம்
ஒரே இரவில் இணைப்பு: சரத்குமாருக்கு முன்னுரிமை?
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தவர் சரத்குமார்.
அவருக்கு கட்சி ரீதியாக முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மாநிலத் தலைவர் பதவிக்கான பரிசீலனையில் அவரது பெயர் உள்ளது.
மத்திய இணை அமைச்சர் மற்றும் எம்பி பதவிகளை ராஜினாமா செய்துள்ள எல்.முருகனுக்கு தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் அல்லது மாநில அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம்.
பாஜக விதிகளின்படி முன்னாள் தலைவர்கள் மீண்டும் தலைவராக நியமிக்கப்படுவதில்லை என்பதால் புதிய முகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
பரிசீலனையில் முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசனின் பெயர் இடம்பெற்றிருந்தபோதிலும், அவர் ஏற்கனவே ஆந்திர மாநிலத்தின் இணைப் பொறுப்பாளராக செயல்படுவதால் அவருக்கு வாய்ப்புகள் குறைவு எனத் தெரிகிறது.