திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் இளைஞர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் பெரும்பாலான பக்தர்கள் வந்துசெல்வர், திருமஞ்சன கோபுரம் வழியேவும் சிலர் வருவார்கள். நேற்று(மார்ச்.22) யுகாதி பண்டிகை விடுமுறை தினம் என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இந்நிலையில், திருமஞ்சன கோபுரம் வழியே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கையில் கத்தியுடன் பக்தர்களை மிரட்டியவாறு கோயிலுக்குள் நுழைந்துள்ளார். திடீரென கோயில் அலுவலகத்திற்குள் சென்ற அவர் அங்கிருந்த பொருட்களை தூக்கி வீசியுள்ளார். அலுவகத்திற்குள் அமர்ந்து கொண்டு சிறிது நேரம் அனைவரையும் மிரட்டிக்கொண்டிருந்த அவரை பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறை உதவியோடு பக்தர்கள் சிலர் மடக்கி பிடித்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
அடிபட்ட இளைஞரை மருத்துவமனையில் சேர்த்த போலீசார்
கத்தியுடன் நுழைந்த நபரை கோயிலிருந்த பக்தர்கள் சிலர் தாக்கியதில் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் கொண்டு சென்று அனுமதித்தனர். இது குறித்து அவருடன் வந்த அவரது காதலியான ஜெனிபர் என்னும் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளார்கள். விசாரணையில் அந்த இளைஞர் பெங்களூரை சேர்ந்த அப்பு என்பதும், இவர்களை சிலர் துரத்தியதால் கோயிலுக்குள் வந்ததாகவும் கூறியுள்ளார். இவர்கள் எதற்கு பெங்களூரில் இருந்து வந்தார்கள்? இவர்களை துரத்தியது யார்? என்ற மற்ற தகவல்களை கண்டறிய போலீசார் தொடர்ந்து தங்கள் விசாரணையினை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.