சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்-போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்
வரும் 25ம் தேதி கிறிஸ்துவர்களது பண்டிகையான கிறிஸ்துமஸ் கொண்டாடப்படவுள்ளது. அதற்கேற்றாற்போல் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள், நீண்டத்தூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகளில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டதாக தெரிகிறது. அதே போல் நாளை சென்னையில் இருந்து புறப்படும் 450 அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 22 ஆயிரம் பேர் முன் பதிவுகளை செய்துள்ளார்கள். குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் நிரம்பி விட்டதால் 500 சிறப்பு பேருந்துகளை மக்கள் வசதிக்காக இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நாளை பிற்பகல் கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் செயல்படவுள்ளது
இது குறித்து தமிழக போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், "பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாகவும் அனைத்து ரயில்களின் முன்பதிவுகளும் முடிந்து விட்டது. இதனால் மக்கள் அரசு பேருந்துகளை நோக்கி வருவார்கள், அவர்களின் வசதிக்காகவே 500 சிறப்பு பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நாளை பிற்பகல் முதல் சிறப்பு பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்படும். வழக்கமாக இயங்கும் 2100 பேரூந்துகளோடு இந்த 500 சிறப்பு பேருந்துகளும் இயங்கும்" என்று தெரிவித்தனர். மேலும் மக்களின் தேவையை உணர்ந்து கூடுதல் பேருந்துகளும் இயக்க அரசு தயாராக உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.