ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் தொடர்ந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் என்பது தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி 1ம் தேதி வெளியான அறிவிப்பின் படி, 45 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஆகியவை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் 30க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடந்த ஜனவரி 30ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு இன்று ஓர் உத்தரவினை பிறப்பித்துள்ளது.
தலைமை செயலர் இறையன்பு அறிக்கை வெளியீடு
திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அந்த மாவட்ட ஆட்சியர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடவேண்டியவை. இது தொடர்பான அறிக்கையினை தலைமை செயலர் இறையன்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, சமூக பாதுகாப்பு இயக்குனர் வளர்மதி ஐ.ஏ.எஸ். ராணிப்பேட்டை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷாவா இடமாற்றம் செய்யப்பட்டு சமூக பாதுகாப்பு துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.