வெற்றிகரமாக அரங்கேறியது முதல் ஜல்லிக்கட்டு போட்டி - 400க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்டதாக தகவல்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு வழக்கம் போல் இந்தாண்டும் பெருமளவில் நடக்க ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் வெற்றிகரமாக அரங்கேறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நேற்று காலை 8.30 மணியளவில் துவங்கி நடைபெற்றுள்ளது. பாதுகாப்பு காரணமாக இரண்டு முறை இந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மிகுந்த ஏதிர்பார்ப்புகளுக்கிடையில் நடந்த இந்த போட்டியினை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் துவங்கி வைத்தனர்.
400க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்ட நிலையில், கிட்டத்தட்ட 74 பேர் காயமடைந்ததாக தகவல்
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட கிட்டத்தட்ட 484 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டதாக கூறப்படுகிறது. சீறி பாய்ந்த காளைகளை பிடிக்க களத்தில் இறங்கிய வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகளை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். இதில் வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், கட்டில், மின்விசிறி, ரொக்கப்பணம் போன்ற பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் பாய்ந்ததில் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் இரு காவலர்கள் என கிட்டத்தட்ட 74 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் படுகாயம் அடைந்த 10 பேர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.