மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
ஒவ்வொரு ஆண்டும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, போன்ற 24 மொழிகளில் சிறந்த நூல்களை தேர்வு செய்து, மத்திய அரசு சார்பில் அதனை எழுதிய எழுத்தாளர்களுக்கு உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது அளிக்கப்படும். அதில் தாமிர பட்டயம் விருதுடன், ரூ.1 லட்சம் பணமும் வழங்கப்பட்டு கவுரவப்படுத்துவது வழக்கம். அதன்படி 2022ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ் படைப்பிற்காக எழுத்தாளர் மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவல் தேர்வாகியுள்ளது. இந்த நாவல், இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையப்படுத்தி எழுதப்பட்டதாகும். 1801ம் ஆண்டு 6 மாதங்கள் நடந்த காளையார் போராட்டத்தை முன்வைத்து எழுதப்பட்டுள்ள இந்த நாவலில் அன்றைய கால தமிழர்களின் வாழ்க்கை சூழல், ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகள் குறித்தும் தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
அரசின் வேளாண் துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் எழுத்தாளர் மு.ராஜேந்திரன்
சாகித்ய அகாடமி விருதிற்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் மு.ராஜேந்திரன் அவர்கள் தமிழ்நாடு அரசின் வேளாண் துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மதுரை மாவட்டம், வடகரை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், தமிழ் இலக்கியத்திலும் தமிழக வரலாற்றின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டவர். இந்த விருது பெற்றதை குறித்து ராஜேந்திரன் அவர்கள் ஒரு ஊடகத்தில் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், "காலா பாணி நாவலுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். இதில் அதிகம் அறியப்படாத ஜெகநாதர் ஐயர், மனக்காடு சாமி, மருதுபாண்டியர் மகன் 15 வயது சிறுவன் துரைசாமி ஆகியோர் குறித்து எழுதியது சந்தோஷமாக உள்ளது" என்று கூறியுள்ளார்.