
2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை
செய்தி முன்னோட்டம்
2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் போது 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை "ஆதாரம் இல்லாததால்" குஜராத் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட 22 பேரில் 8 பேர் வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பே இறந்துவிட்டனர்.
அயோத்தியிலிருந்து இந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற சபர்மதி ரயிலில் 59 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிப்ரவரி 2002இல் மதக் கலவரம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கலவரத்தின் போது, குஜராத் மாநில முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை விமர்சிக்கும் "பிபிசி'ஸ் இந்தியா: தி மோடி கொஸ்டின்" என்ற பிபிசி ஆவணப்படம் குறித்து, இந்தியாவில் பெரும் சர்ச்சை நடந்து வரும் நிலையில், இவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குஜராத்
குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை: சோலங்கி
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின் போது கிட்டத்தட்ட 2,000 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஹர்ஷ் திரிவேதி குற்றம் சாட்டப்பட்ட 22 பேரையும் விடுதலை செய்திருக்கிறார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால்சிங் சோலங்கி, பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் உட்பட அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றம் ஆய்வு செய்தது, ஆனால் தடவியல் சோதனைகளில் ஆதாரங்கள் வலுவாக இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று தெரிவித்திருக்கிறார்.
100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டதாகவும் ஆனால் அவர்களில் பலர் மாற்றுக்கருத்து தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
2002இல் நடைபெற்ற இந்த சம்பத்திற்கு 2003ஆம் ஆண்டில் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2004ஆம் ஆண்டில் தான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.