ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரிய மனுவை ஏற்க மறுத்தது உச்ச நீதிமன்றம்
ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(அக். 3) ஏற்க மறுத்தது. ராமர் சேது தலத்தின் அருகே 'தரிசனம்' செய்வதற்காக சுவர் கட்ட வேண்டும் என்று கோரிய மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுநல வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இவை அரசாங்கத்தின் வரம்புக்குட்பட்ட நிர்வாக விஷயங்கள் என்று தெரிவித்தது. "இதனை நீதிமன்றம் செய்ய வேண்டுமா? இவை அரசாங்கத்தின் நிர்வாக விஷயங்கள்... நீதிமன்றம் எப்படி அதில் நுழையும்?" என்று நீதிபதி கவுல் குறிப்பிட்டார்.
முன்னாள் எம்பி சுப்ரமணியன் சுவாமியின் மனு தள்ளுபடி
ராமர் சேது தலத்தின் இருபுறமும் சுவர் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பேசிய நீதிபதிகள், இதுபோன்ற விஷயங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியானதா என்று கேள்வி எழுப்பினர். மனுதாரர் கோரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்திய அரசியலமைப்பின் 32 வது பிரிவின் கீழ் அதிகார வரம்பை செயல்படுத்த நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் ராஜ்யசபா எம்பி சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவையும் ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.