இன்று வெளியாகிறது 'ஜன நாயகன்' vs CBFC வழக்கின் முடிவு; உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கும் கோலிவுட்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் 'ஜன நாயகன்' படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தனது முக்கிய தீர்ப்பை வழங்க உள்ளது. இந்த தீர்ப்பானது படத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதால் ரசிகர்கள் மற்றும் தயாரிப்பு தரப்பு மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இன்று வெளியாகும் தீர்ப்பிற்கு இரு சத்தியக்கூறுகள் உள்ளன. அவை என்ன என்பதையும், அதன் பின்னர் வழக்கின் போக்கு எப்படி செல்லும் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
சாத்தியக்கூறுகள்
நீதிமன்றத் தீர்ப்பின் இரண்டு சாத்தியக்கூறுகள்
ஒருமனதான தீர்ப்பு: வழக்கை விசாரிக்கும் இரண்டு நீதிபதிகளும் ஒரே கருத்தை முன்வைத்தால், இன்றுடன் இந்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வரும். தணிக்கை வாரியத்திற்கு சாதகமாகவோ அல்லது தயாரிப்பு நிறுவனத்திற்குச் சாதகமாகவோ தெளிவான தீர்ப்பு கிடைக்கும். சட்ட வல்லுநர்கள் பெரும்பாலும் இத்தகைய ஒருமனதான தீர்ப்பு வர வாய்ப்பிருப்பதாகவே கருதுகின்றனர். மாறுபட்ட தீர்ப்பு: ஒருவேளை இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்தால், வழக்கு ஒரு 'ஸ்பிளிட் வெர்டிக்ட்'டை (Split Verdict) சந்திக்கும். அத்தகைய சூழலில், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு (Third Judge's Review) மாற்றப்படும். இது படத்தின் வெளியீட்டை மேலும் சில வாரங்களுக்குத் தள்ளிப்போடக் காரணமாக அமையலாம்.