பிக் பாஸ் தமிழ் சீசன் 8: என்னது இவரை வெளியேற்றி விட்டார்களா? ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. சீசன் தொடங்கி இரண்டாவது வாரம் முடியும் தருவாயில் உள்ள நிலையில், இந்த சீசனின் இரண்டாவது எலிமினேஷன் இன்று (அக்டோபர் 20) அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது. இந்நிலையில், வெளியேற்றப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படாத ஒரு போட்டியாளர், இந்த வாரம் எவிக்சன் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, பிக் பாஸ் தமிழ் சீசன் 8 அக்டோபர் 6 ஆம் தேதி விஜய் டிவியில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் சச்சனா நிகழ்ச்சியிலிருந்து எலிமினேஷன் மூலம் நீக்கப்பட்டார். ஆனால், அந்த வார இறுதியில் மீண்டும் உள்ளே நுழைந்தார்.
இரண்டாவது வார எவிக்சன்
இதையடுத்து கடந்த வாரம் நடந்த முதல் எவிக்சனில் போட்டியாளர் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து இரண்டாவது வெளியேற்றத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த வாரத்தில் எவிக்சனுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஆர்.ஜே. விஷால், தர்ஷா குப்தா, சௌந்தர்யா, ரஞ்சித், ஜெஃப்ரி, முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், அர்னவ் மற்றும் சஷானா ஆகியோர் உள்ளனர். இவர்களில் அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றதால் ஆபத்து ஜோனில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அர்னவ் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது வெளியேற்றம் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளது.
அன்ஷிதாவுடனான அர்னவ் உறவு
குறிப்பாக அவரும் சக போட்டியாளரான அன்ஷிதாவும் கடந்தகாலத்தில் உறவில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், இருவரும் ஒன்றாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இதனால், இருவரும் பிக் பாஸ் வீட்டில் நீண்ட காலம் நீடிப்பார்கள் என்றும், இந்த சீசனில் அதிக கன்டென்ட் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அர்னவும், ஒரு டாஸ்கின் போது, நகைச்சுவையாக அன்ஷிதாவுக்கு சோம்பேறி என்ற பட்டத்தை வழங்கியதால், நிலைமை தீவிரமடைந்தது. அன்ஷிதா இதற்கு வெளிப்படையாக வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால், அர்னவின் இந்த எதிர்பாராத வெளியேற்றம் பிக் பாஸ் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, கமல்ஹாசனுக்கு பதிலாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி நன்றாக செயல்படுகிறார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.