LOADING...
தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜாபிற்கு இந்தியாவில் தடை: ஆஸ்கார் பரிந்துரை படம் முடக்கப்பட்டதன் பின்னணி என்ன?
தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜாபிற்கு இந்தியாவில் தடை

தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜாபிற்கு இந்தியாவில் தடை: ஆஸ்கார் பரிந்துரை படம் முடக்கப்பட்டதன் பின்னணி என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Mar 21, 2026
02:39 pm

செய்தி முன்னோட்டம்

துனிசிய இயக்குநர் கௌதர் பென் ஹானியா இயக்கிய தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜாப் என்ற ஆவணத் திரைப்படம், இந்தியாவில் வெளியாவதற்குச் சான்றிதழ் அளிக்க இந்தியத் திரைப்படத் தணிக்கை வாரியம் மறுத்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்தப் படம் வெளியானால் இந்தியா - இஸ்ரேல் இடையிலான சுமூகமான உறவு பாதிக்கப்படும் என்று காரணம் கூறப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

கதை

படத்தின் கதை என்ன?

இந்தப் படம் 2024 ஆம் ஆண்டு காசாவில் நடந்த ஒரு நெஞ்சை உலுக்கும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. 5 வயது சிறுமி ஹிந்த் ரஜாப், தனது குடும்பத்தினருடன் காரில் தப்பிக்க முயன்றபோது இஸ்ரேலியப் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக்கொண்டார். அந்தச் சிறிய காரில் 335 தோட்டாக்கள் துளைக்கப்பட்டிருந்தன. சிறுமியின் உறவினர்கள் அனைவரும் கொல்லப்பட, ஹிந்த் ரஜாப் மட்டும் உயிருடன் மீட்கப்படக் காத்துக்கொண்டிருந்தார். செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்களிடம் ஹிந்த் ரஜாப் அழுதபடி உதவி கேட்ட அந்த ஆடியோ கோப்புகள் உலகையே உலுக்கின. 12 நாட்களுக்குப் பிறகு, அந்தச் சிறுமி மற்றும் அவரை மீட்கச் சென்ற மருத்துவக் குழுவினரின் சடலங்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

தடைக்கான காரணம்

இந்தியாவில் ஏன் தடை?

மார்ச் 2026இல் ஆஸ்கார் விருதுகளுக்கு இணையாக இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பிப்ரவரி 27இல் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பயணத்தை முடித்துத் திரும்பிய மறுநாளே இந்தப் படம் தணிக்கை குழுவிற்குத் திரையிடப்பட்டது. இந்தப் படம் இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதால், இரு நாட்டுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப உறவுகளில் விரிசல் ஏற்படும் எனத் தணிக்கை வாரியம் கருதுகிறது. "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு ஒரு திரைப்படத்தைக் கண்டு அஞ்சுகிறதா?" என இயக்குநர் கௌதர் பென் ஹானியா கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் எம்பி சசி தரூர் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்தத் தடையைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Advertisement