பிறந்தநாளில் வெளியான பிரியங்கா சோப்ராவின் மந்தாகினி கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்! ராஜாமௌலியின் வாரணாசி பட அப்டேட்
செய்தி முன்னோட்டம்
ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமும் எதிர்பார்ப்புகளுடன் காத்துக்கொண்டிருக்கும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜாமௌலியின் அடுத்த பிரம்மாண்ட பான்-இந்தியா திரைப்படமான வாரணாசி படத்திலிருந்து புதிய அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகியுள்ளது. உலகளாவிய அளவில் புகழ்பெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா இன்று தனது 44வது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, திரைப்படத்தின் தயாரிப்புக் குழுவினர் அவர் ஏற்று நடிக்கும் மந்தாகினி கதாபாத்திரத்தின் முதல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு ரசிகர்களுக்குப் பெரும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
ராஜாமௌலியின் வைரல் கேப்ஷன்
சிரித்தால் பேரழகு, சினந்தால் நெருப்பு
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜாமௌலி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பிரியங்கா சோப்ராவின் இரண்டு வெவ்வேறு விதமான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதற்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷனில், "அவள் புன்னகைக்கும் போது மென்மையானவள்; சிரிக்காத போது அவள் நெருப்பு. வாரணாசியில் மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதில் ஒரு போஸ்டரில் கருப்பு நிற உடையில் அசாத்திய ஆக்ரோஷமான தோற்றத்திலும், மற்றொரு போஸ்டரில் பனி படர்ந்த மலைகளின் பின்னணியில் மகிழ்ச்சியுடன் நடனமாடும் தோற்றத்திலும் பிரியங்கா சோப்ரா காட்சியளிக்கிறார்.
வலிமையான கதாபாத்திரம்
கதையின் போக்கை மாற்றும் வலிமையான மந்தாகினி கதாபாத்திரம்
இத்திரைப்படத்தின் கதையை வெளியிடுவதற்குப் பதிலாக, கதாபாத்திரத்தின் இருவேறு மாறுபட்ட குணாதிசயங்களை முன்னிலைப்படுத்துவதிலேயே ராஜாமௌலி கவனம் செலுத்தியுள்ளார்.
உலகளவில் பயணிக்கும் ஒரு தீவிரமான, அதேசமயம் உணர்வுப்பூர்வமான ஒரு வலிமையான பெண்ணாக மந்தாகினி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கதையின் நகர்விலும், முக்கியக் கதாபாத்திரங்களுக்கு இடையே ஏற்படும் திருப்பங்களிலும் இந்த மந்தாகினி பாத்திரம் ஒரு மிக முக்கியப் பங்காற்றவுள்ளதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அறிவியல் புனைகதை
அறிவியல் புனைகதையும் இந்தியப் புராணங்களும் கலந்த வாரணாசி
ராஜாமௌலியின் திரைப்பயணத்திலேயே மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் வாரணாசி திரைப்படம், அறிவியல் புனைகதை, டைம் டிராவல் மற்றும் இந்திய புராணக் கதைகளை ஒன்றிணைத்த ஒரு அசாத்திய அட்வென்ச்சர் காவியமாகும்.
இதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு ருத்ரா என்ற சிவன் பக்தனாகவும், கதையின் ஒரு பகுதியில் ஸ்ரீ ராமனாகவும் இரட்டை பரிமாணங்களில் நடிக்கிறார்.
பல நூற்றாண்டுகள் மற்றும் கண்டங்களைக் கடந்து ஒரு சக்திவாய்ந்த விண்வெளிப் பொருளை மீட்பதற்காக அவர் மேற்கொள்ளும் ஆபத்தான பயணமே படத்தின் மையக்கதையாகும்.
2027 ரிலீஸ்
2027ல் படம் வெளியீடு
இந்த காஸ்மிக் பொருளைக் கைப்பற்றி உலகையே ஆளத் துடிக்கும் கும்பா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிக்கிறார்.
கிறிஸ்துவுக்கு முன் 7200 முதல் கி.பி 2071 வரையிலான நீண்ட காலவரிசையைக் கொண்டுள்ள இத்திரைப்படத்தில், ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரம்மாண்ட 30 நிமிடப் போர் இடம்பெறவுள்ளது.
அண்டார்டிகாவின் பனிப்பிரதேசம், ஆப்பிரிக்கக் காடுகள் முதல் ஆன்மீக நகரான வாரணாசி வரை உலகளவில் பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், வரும் ஏப்ரல் 7, 2027 அன்று திரையரங்குகளில் உலகளாவிய அளவில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Grace when she smiles.
— rajamouli ss (@ssrajamouli) July 18, 2026
Fire when she doesn’t.
Mandakini… @PriyankaChopra in #Varanasi pic.twitter.com/4lYerYbm4Q