வாரிசு பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?
நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடித்து வெளிவந்த பிரின்ஸ் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் தோல்வியை அடைந்தது. இந்நிலையில் இவர் அடுத்து வரும் படங்களின் கதையை மிகவும் கவனமாக தேர்வு செய்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்தாக வெளிவர இருக்கும் படம் மாவீரன். இந்த படத்தினை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கின்றனர். இவர்களுடன் மிஸ்கின், யோகிபாபு மற்றும் சரிதா போன்றோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கார்ட்டூனிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் திரைக்கு 2023-ஆம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் தில் ராஜுவுடன் இணைகிறாரா?
சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாக இருக்கும் அயலான் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடைப்பெற்று வருகிறது. மேலும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் கமிட்டாகி வருகிறார். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இந்நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகின. இப்படம் தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இதனை தில் ராஜு தரப்பு மறுத்துள்ளது. இவர் விஜய் நடிப்பில் திரையரங்குகளில் பொங்கலுக்கு வெளிவர காத்திருக்கும் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.