வெறும் 98 வினாடிகளில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிக்கெட்டுகள் அமெரிக்காவில் விற்பனை
கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியான படம் 'ஆர்.ஆர்.ஆர்' படமாகும். இப்படத்தை இந்தியாவின் பிரபல இயக்குனரான எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கினார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்த்தில் N. T. ராமாராவ் ஜூனியர் மற்றும் ராம் சரண் நடித்து இருந்தனர். இவர்களுடன் அஜய் தேவ்கன், அலியா பட், ஷ்ரியா சரண், சமுத்திரக்கனி, ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி மற்றும் ஒலிவியா மோரிஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்தார். பிரம்மாண்டமாய் உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை செய்தது. ரூ.500 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் உலகளவில் திரையிடப்பட்டு ரூ.1200 கோடி வசூல் சாதனை செய்தது.
கோல்டன் க்ளோப் விருதுக்கு தேர்வாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படம்
ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினரின் முயற்சியில் 15 பிரிவுகளில் இப்படத்தை ஆஸ்கார் விருதுக்கு விண்ணப்பித்தனர். அதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு கூத்து என்கிற பாடல் இறுதி பட்டியலில் இடம் பிடித்துள்ளது. நியூயார்க் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது வழங்கும் விழாவில் ராஜமௌலி சிறந்த இயக்குனர் பிரிவில் தேர்வாகினர். மேலும் ஆஸ்கருக்கு இணையான கோல்டன் க்ளோப் விருதுகளில் வேற்று மொழி படத்துக்கான பிரிவில் இந்த படம் தேர்வாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி ஜனவரி 11-ந்தேதி அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதனையொட்டி இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஜனவரி 9-ந்தேதி இந்த படத்தை திரையிடப்பட இருக்கிறது. அதற்கான டிக்கெட்டுகள் வெறும் 98 வினாடிகளில் விற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைத்துள்ளது.