Loading...
இந்த கார்த்திக் சுப்பராஜைத்தான் தேடினேன்: டோரதி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்
டோரதி படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்துக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த கார்த்திக் சுப்பராஜைத்தான் தேடினேன்: டோரதி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்

எழுதியவர் Vasuki
Oct 10, 2026
07:01 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியான 'டோரதி' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் வெளியாகி இரண்டு வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நேற்று இசைஞானி இளையராஜாவுடன் கேக் வெட்டி படத்தின் வெற்றியை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உற்சாகமாகக் கொண்டாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து, தனது அபிமான நட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தைப் பார்த்துவிட்டுத் தொலைபேசி வாயிலாகப் பாராட்டிய தகவலை அவர் இன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

உங்களுக்கு என் சல்யூட்

ரஜினிகாந்தின் நெகிழ்ச்சி வார்த்தைகள்

ரஜினிகாந்தின் பாராட்டு குறித்துப் பதிவிட்டுள்ள இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், "டோரதி திரைப்படம் தலைவருக்கு மிகவும் பிடித்திருந்தது".

"படத்தின் நுணுக்கங்களைப் பாராட்டி ஒரு மணி நேரம் விரிவாகப் பேசினார். ஒரு படைப்பாளியாக இதைவிட சிறந்த தருணம் இருக்க முடியாது" என நெகிழ்ச்சி தெரிவித்தார்.

"மேலும், இந்த கார்த்திக் சுப்பராஜைத்தான் இத்தனை நாட்களாகத் தேடினேன், உங்களுக்கு எனது ராயல் சல்யூட் என ரஜினி பாராட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்".

பேட்ட படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜின் படைப்பிற்கு ரஜினிகாந்த் அளித்துள்ள இந்த உச்சக்கட்டப் பாராட்டு, படக்குழுவினரையும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT