LOADING...
ஆசியாவின் மூத்த குரல்: 100-வது ஆண்டை நிறைவு செய்த இலங்கை வானொலி!
1925 டிசம்பர் 16 அன்று இலங்கையில் வானொலி சேவை முதன்முதலில் தொடங்கப்பட்டது

ஆசியாவின் மூத்த குரல்: 100-வது ஆண்டை நிறைவு செய்த இலங்கை வானொலி!

எழுதியவர் Venkatalakshmi V
Dec 22, 2025
08:58 am

செய்தி முன்னோட்டம்

ஆசியாவிலேயே பழமையான வானொலி சேவையான இலங்கை வானொலி (தற்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - SLBC), தனது 100-வது ஆண்டு மைல்கல்லை எட்டி வரலாறு படைத்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், பிபிசி (BBC) தொடங்கப்பட்ட மூன்றே ஆண்டுகளில், அதாவது 1925 டிசம்பர் 16 அன்று இலங்கையில் வானொலி சேவை முதன்முதலில் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இடைவிடாது ஒலித்துக்கொண்டிருக்கும் பெருமையை இது பெற்றுள்ளது. தொடர்ந்து சில ஆண்டுகளில் தனது வர்த்தக ஒளிபரப்பை துவங்கியதும், இந்தியத் துணைக் கண்ட அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இமயமலையில் உச்சியில் கால் பதித்த எட்மண்ட் ஹிலாரியும், டென்சிங் நார்கேயும் கூட இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பைத்தான் முதலில் செவிமடுத்தார்கள் என வரலாறு கூறுகிறது.

ரேடியோ சிலோன்

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் 'ரேடியோ சிலோன்'

1950 மற்றும் 60-களில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் 'ரேடியோ சிலோன்' ஈர்க்காத காதுகளே இல்லை எனலாம். குறிப்பாக, அமீன் சயானி தொகுத்து வழங்கிய 'பினாகா கீத்மாலா' என்ற ஹிந்தி பாடல் வரிசை நிகழ்ச்சி, இந்திய துணை கண்டத்தையே கட்டிப்போட்டது. இந்தியாவில் ஒரு காலத்தில் திரைப்படப் பாடல்களை ஒலிபரப்ப 'அகில இந்திய வானொலி' (AIR) கட்டுப்பாடு விதித்திருந்தது. அந்தச் சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட இலங்கை வானொலி, வர்த்தக சேவையின் மூலம் ஹிந்தி மற்றும் தமிழ் சினிமா பாடல்களை தடையின்றி ஒலிபரப்பி கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தது. பி.ஹெச். அப்துல் ஹமீது, மயில்வாகனன், கே.எஸ். ராஜா போன்ற புகழ்பெற்ற அறிவிப்பாளர்களின் குரல்கள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தன.

Advertisement