2022ல் வெளியான மலையாளத் திரைப்படங்களில் 90 சதவீத படங்கள் தோல்வி
தென்னிந்திய சினிமாவில் மலையாளத் திரைப்படங்கள் எப்போதுமே நல்ல விமர்சனங்களை பெறுவது வழக்கம். மலையாளத் திரைப்படங்கள் பெரும்பாலும் எதார்த்தத்தை தழுவிய வாழ்வியலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும். நல்ல கதைகளை மட்டுமே மையமாக கொண்டு இவர்கள் எடுக்கும் படம், நாடெங்கிலும் ரசிகர்களை தக்க வைத்துள்ளது. ஆனால் கடந்த வருடம் மலையாள திரையுலகில் வெளிவந்த படங்களில் 90 சதவீத படங்கள் தோல்வியை தழுவி உள்ளதாம். இது மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வருடம் ஜனவரியில் இருந்து டிசம்பர் வரை மலையாளத்தில் திரைக்கு வந்த படங்களின் எண்ணிக்கை 176. இதில் 17 படங்கள் மட்டுமே நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றுள்ளன.
மலையாள திரையுலகில் 300 கோடிக்கும் மேல் நஷ்டம்
அதிலும் 10க்கும் குறைவான படங்கள் மட்டுமே சராசரியாக ரூ.10 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளன. 2022-ஆம் ஆண்டு மலையாள திரையுலகம் சராசரியாக ரூ.300 கோடிக்கும் மேல் நஷ்டத்தை சந்தித்து இருக்கும் என கேரளத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (KFPA) புள்ளி விவரங்கள் கூறுகின்றன. டாப் ஹீரோக்கள் இல்லாமல் வெளிவந்த ஜெய ஜெய ஜெய ஹே திரைப்படம் இந்த வருடம் மலையாள திரையுலகில் பெரிய ஹிட் கொடுத்து நல்ல வசூல் பெற்று கொடுத்துள்ளது. கன்னட மொழியில் இருந்து டப் செய்யப்பட்டு வெளிவந்த கே.ஜி.எப் -2 படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.30 கோடி வரை வசூலை ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.