சினிமாவின் என்சைக்ளோபீடியா; சுந்தர் சி விலகலுக்கு பிறகு கமல்ஹாசன் குறித்து குஷ்பு கருத்து
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI) பங்கேற்ற நடிகை குஷ்பு சுந்தர், நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சுஹாசினி மணிரத்னம் ஆகியோரை விமான நிலையத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து சமூக வலைதளத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்த குஷ்பு, கமல்ஹாசனை சினிமாவின் என்சைக்ளோபீடியா என்று புகழ்ந்துள்ளார். விமான நிலைய ஷட்டிலில் கமல்ஹாசன் மற்றும் சுஹாசினி மணிரத்னத்துடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படங்களை குஷ்பு சுந்தர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கமல்ஹாசனுடன் மிகவும் கலகலப்பான முறையில் உரையாடியதையும், ஒருவருக்கொருவர் பாசத்தைப் பரிமாறிக்கொண்டதையும் புகைப்படங்கள் காட்டுகின்றன.
சுந்தர் சி
சுந்தர் சி விலகல் சர்ச்சை
நடிகர் ரஜினிகாந்த் நடிக்க, கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தைத் தனது கணவர் சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சில நாட்களிலேயே அவர் அத்திட்டத்திலிருந்து விலகினார். 'சரியான கதை இல்லை' என்று வதந்திகள் பரவியபோது, குஷ்பு சுந்தர் தனது கணவருக்கு ஆதரவாகப் பதிலளித்திருந்தார். சுந்தர் சி விலகியது குறித்துப் பேசிய கமல்ஹாசன், "சுந்தர் சி தனது விலகலுக்கான காரணத்தை ஒரு செய்தி வெளியீடு மூலம் விளக்கியுள்ளார். ஒரு முதலீட்டாளர் என்ற முறையில், என்னுடைய நட்சத்திரத்துக்குப் பிடித்த கதைதான் படத்துக்கு வேண்டும். அவர் திருப்தி அடையும் வரைச் சரியான கதையைத் தேடுவோம்" என்று தெரிவித்திருந்தார். தற்போது வரை இந்தப் படத்திற்கான புதிய இயக்குனர் யார் என்று அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.