LOADING...
ஜனநாயகன் படத்தைத் தொடர்ந்து ரஜினி படத்திற்கும் வந்த சோதனை! ஜெயிலர் 2 படப்பிடிப்பு வீடியோ கசிவு
ஜெயிலர் 2 படப்பிடிப்பு வீடியோ கசிவு

ஜனநாயகன் படத்தைத் தொடர்ந்து ரஜினி படத்திற்கும் வந்த சோதனை! ஜெயிலர் 2 படப்பிடிப்பு வீடியோ கசிவு

எழுதியவர் Sekar Chinnappan
Apr 17, 2026
05:27 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் மற்றும் தென்னிந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்திற்குப் படப்பிடிப்புத் தொடக்கத்திலேயே ஒரு பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி வரும் இந்தப் படத்தின் பின்னணி காட்சிகள் (BTS Video) இணையதளங்களில் கசிந்து வைரலாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், வீடியோக்களைப் பகிரும் நபர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

எச்சரிக்கை

சன் பிக்சர்ஸ் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை

ஜெயிலர் 2 படப்பிடிப்புத் தளத்தில் ரகசியமாகப் படம்பிடிக்கப்பட்ட வீடியோக்கள் எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் பரவி வருகின்றன. இது குறித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களது ஆன்டி-பைரசி குழு இணையதளங்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்தப் படக் காட்சிகளைப் பகிரும் அல்லது விளம்பரப்படுத்தும் சமூக வலைதளக் கணக்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு பகிரப்படும் கணக்குகள் முடக்கப்பட்டால், அதற்குத் தயாரிப்பு நிறுவனம் பொறுப்பேற்காது." என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஜனநாயகன் சர்ச்சை

ஜனநாயகன் லீக் சர்ச்சையும் கைதுகளும்

சமீபத்தில் நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே ஹெச்டி தரத்தில் இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாகச் சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, ஒரு உதவி எடிட்டர் உட்பட ஒன்பது பேரைக் கைது செய்துள்ளனர். அந்த சுவடு மறைவதற்குள் தற்போது ரஜினிகாந்தின் படத்திற்கும் இது போன்ற லீக் பிரச்சனை ஏற்பட்டுள்ளது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது பாதுகாப்பு வளையத்தை மேலும் பலப்படுத்தியுள்ளன.

Advertisement

ஜெயிலர் 2

மீண்டும் வரும் முத்துவேல் பாண்டியன்

2023 ஆம் ஆண்டு வெளியாகி 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகிறது. இதில் மீண்டும் டைகர் முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த் களமிறங்குகிறார். ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் ஆகியோர் முதல் பாகத்தைப் போலவே இதிலும் தொடர்கின்றனர். கூடுதலாக, பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Advertisement