இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்: திரையுலகினர் அஞ்சலி
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரைப்பட இசை உலகில் தனது தனித்துவமான குரலால் 90-களின் காலகட்டத்தில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. இசையமைப்பாளர் தேவா மறைந்த சில நாட்களிலேயே அவரது ஆஸ்தான பாடகராகத் திகழ்ந்த கிருஷ்ணராஜும் மறைந்திருப்பது திரைத்துறையினரையும் இசை ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இசையமைப்பாளர் தேவாவின் இசையில் 'அதிகாலை சுபவேளை' திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமான கிருஷ்ணராஜ், இதுவரை 300-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார். தேவாவின் பெரும்பாலான திரைப்படங்களில் இவருக்கு ஒரு பாடலாவது கண்டிப்பாய் இடம்பெற்றுவிடும்.
இசைப்பயணம்
2000-களுக்கு பிறகும் தொடர்ந்த இசைப்பயணம்
'திருப்பதி ஏழுமலை வெங்கடேசா', 'காத்து அடிக்குது', 'சிரிச்சுட்டு போனாலும்' உள்ளிட்ட பல பாடல்கள் இவருக்கு புகழைத் தந்தாலும், 'பொற்காலம்' திரைப்படத்தில் இவர் பாடிய 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து' பாடலே இவரது திரைப்பயணத்தின் சிறந்த பாடலாகக் கருதப்படுகிறது.
90-களைத் தாண்டி 2000-க்கு பிறகும் பல முக்கியத் திரைப்படங்களில் இவர் பாடி அசத்தினார்.
'பருத்திவீரன்' படத்தில் 'அய்யயோ', 'கழுகு' படத்தில் 'ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்' ஆகிய ஹிட் பாடல்களைப் பாடிய இவர், இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் 'நாலு நிமிஷம்' என்ற பாடலைப் பாடியிருந்தார்.
இவரது உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காகச் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.